நாடு முழுவதும் 508 ரயில்நிலையங்களை 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் அம்ரித் பாரத் ரயில்நிலையத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதில் தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புதிய ஆற்றல், புதிய உத்வேகம், புதிய தீர்மானங்கள் என்ற உணர்வின் வரிசையில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக கூறினார்.
உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர், நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பெரும்பான்மை அரசு அமைந்துள்ளதும், அந்த அரசு சவால்களுக்கு நிரந்தர தீர்வு கண்டு வருவதுடன், முக்கிய முடிவுகளை எடுத்து வருவதுமே அதற்கு காரணம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
தாங்களும் வேலை செய்ய மாட்டோம், மற்றவர்களையும் பணி செய்ய விடமாட்டோம் என்ற கொள்கையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக விமர்சித்த பிரதமர் மோடி, ஆனால் தமது அரசு நேர்மறை அரசியல் பாதையில் பயணித்து வருவதாக குறிப்பிட்டார்.