மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை, சட்டம்-ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து விட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் அம்மாநில டி.ஜி.பி. வரும் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சுமார் 6 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்களே... எப்படி? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வன்முறைகளை தடுக்காமல் மணிப்பூர் காவல்துறை அலட்சியமாக நடந்துகொண்டதாக நீதிபதிகள் சாடினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நீதி கிடைப்பது தொடர்பாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைப்பது பற்றி பரிசீலித்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.