பாசுமதி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை உலக அளவில் உணவுப்பொருள் விலையில் ஏற்ற இறக்கத்தை அதிகப்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அரிசி விலை உயர்வை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இதனால் அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்று அச்சத்தில் அங்குள்ள மளிகை பொருள் விற்பனை கடைகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு அரிசி வாங்கி சென்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியரி ஆலிவியர், உக்ரைனில் இருந்து ஆண்டுக்கு 3 கோடி டன் உணவு தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யவிடாமல் ரஷ்யா தடுத்து வரும் நிலையில், இந்திய அரசும் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் உலகளவில் உணவு தானியங்கள் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.