ஆந்திராவில் ஏழைப் பெண் ஒருவர், சரியாக வாரப்படாத தலை, ரப்பர் செருப்பு, தன்னிடம் இருப்பதிலேயே கிழியாத ஒரு சேலையை அணிந்து, பல்கலைக் கழகம் மேடையேறி முனைவர் பட்டம் பெற்றார்.
அனந்தபுரம் மாவட்டம் நாகலகுண்டத்தைச் சேர்ந்த பாரதி என்ற அந்த பெண்ணுக்கும் அவரது தாய்மாமன் சிவபிரசாதுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பிளஸ்-2 வரையில் படித்துள்ள அவர் திருமணத்திற்கு பின் படிப்பை தொடரவில்லை. மேற்படிப்பு படிக்க விருப்பம் உள்ளதாக பாரதி தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை, கணவர் சிவபிரசாத், கல்லூரியில் சேர்த்துள்ளார்.
38 கிலோ மீட்டர் தூரமுள்ள அனந்தபுரத்திற்குச் செல்வதற்காக தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அதன் பிறகு பேருந்தில் சென்று பாரதி படித்து வந்துள்ளார். வேதியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்த பாரதியை, சிவபிரசாத் அதே பாடத்தில் டாக்டர் பட்டமும் பெற வைத்துள்ளார்.
தான் பெற்ற முனைவர் பட்டத்தை வாங்குவதற்காக குறிப்பிட்ட நாளில் அந்த பல்கலைக் கழகத்திற்கு சென்றபோது அதே நாளில் மேலும் பலர் வந்திருந்தனர்.
ஆனால் அவர்களில் பாரதி மட்டுமே, சரியாக வாரப்படாத தலையுடன், ரப்பர் செருப்பு ஒன்றை போட்டுக் கொண்டு, தன்னிடம் இருப்பதிலேயே கிழியாத ஒரு சேலையை அணிந்தபடி, கணவன் மற்றும் மகளுடன் சென்று மேடை ஏறி பட்டம் வாங்கினார்.
பாரதியின் தோற்றத்தை பார்த்து குழப்பம் அடைந்த சிலர், பின்னர் சுதாரித்து கொண்டு அவருடைய மொத்தக் கதையையும் கேட்டு தெரிந்து வாயடைத்து போயினர்.
பி.எச்.டி. முடித்துவிட்டதால் பல்கலைக் கழகம் மூலமே தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பும் பாரதி, அதனால் கிடைக்க இருக்கும் பொருளாதார வசதி, தங்கள் சிறியக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று தெரிவித்தார்.