எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான கூட்டணி ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கூட்டணிக் கட்சிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பாஜக தலைமையிலான கூட்டணி மாநிலங்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகளைப் போல் வாரிசு அரசியலையும் ஊழலையும் காக்க நிர்ப்பந்தத்தால் அமைத்த கூட்டணி அல்ல என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் மக்களைத் தவறாக கணிப்பதாகக் கூறிய மோடி, பெங்களூருவில் எதற்காக ஒன்று கூடியிருக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், எதிர்க்கட்சியினரின் ஊழல்கள் அம்பலமாகி வருவதாக சாடினார். இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 38 கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.