அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி அமலாக்கத்துறை விசாரணைக்காக இன்று மாலை 4 மணிக்கு அவர்களது அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கனிமவள முறைகேடு மற்றும் அது தொடர்பான அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோர் வசிக்கும் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். இதில், 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களை கண்டெடுத்த அதிகாரிகள், ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சோதனைக்கு இடையே அமைச்சர் பொன்முடியை இரவு 8 மணி வாக்கில் சென்னை சென்னை சாஸ்திரி பவன் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதிகாலை 3 மணி வரை நடந்த விசாரணைக்குப் பின் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மனும் வழங்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை வீட்டில் உள்ள பொன்முடியை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என். நேரு, ரகுபதி, சி.வி. கணேசன், மூர்த்தி உள்ளிட்டோரும், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் சென்று சந்தித்தனர்.
அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
பொன்முடியை சந்தித்த பின் பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்ட பொன்முடி நலமுடன் நன்றாக உள்ளதாக கூறினார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், மடியில் கனமில்லை என்பதால் பொன்முடிக்கு வழியில் பயமில்லை என்றார்.