நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் 38 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு வகுத்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் காரணமாக கூட்டணிக் கட்சிகளிடையே ஆக்கப்பூர்வமான சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளநிலையில் கூடுதலான கட்சிகளை இணைத்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமை பெற்று உள்ளதாக அதன் தலைவர்கள் தெரிவித்தனர்.
கருத்து வேறுபாடுகளால் விலகி இருந்த கட்சிகளும் மீண்டும் பாஜக அணியில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திராவின் ஜன சேனா கட்சியின் தலைவர் நடிகர் பவண் கல்யாண் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.