யமுனை நதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் உள்ள மோரி கேட் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, யமுனை கரையோரத்தில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளதாகவும், சிலர் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆதார் அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்கு டெல்லி அரசு சிறப்பு முகாம்களை அமைக்கும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் உடைகள் வழங்க ஏற்பாடு செய்யும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.