வடமாநிலங்களில் மழைவெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் பெருத்தசேதம் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை சற்றே தணிந்ததால் அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
பஞ்சாபில் சட்லஜ் நதியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாட்டியாலா, குருதாஸ்பூர், மொகாலி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று யமுனை ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆக்ரா, பிரயாக்ராஜ் மற்றும் யமுனைக் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 21 பேர் உயிரிழந்தனர்.