அதிபர் பைடன் விடுத்த சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி காலை 7 மணியளவில் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் பிரதமரின் விமானம் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் முதல் நிகழ்ச்சியாக நியூ யார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
அங்கிருந்து தலைநகர் வாஷிங்டன் டி.சி.க்கு செல்லும் பிரதமருக்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைனுடன் வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ரிச்மாண்ட் நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தீவிர நடனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு வென்றவர்கள், பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருடனும் அவர் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு சூட்டுவதற்காக நியூ ஜெர்ஸியில் மூவர்ண மாலைகள் தயாராகி வருகின்றன.
முன்னதாக, அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், சீனாவுடனான இயல்பான இருதரப்பு உறவுக்கு, எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை காக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் அமைதிக்கு பக்கம் தான் நிற்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.