பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தின் கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், நாளை குஜராத்தின் மாண்ட்வி - பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் குஜராத்தின் செளராஷ்ட்ரா - கட்ச் பிராந்தியத்தின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மாநில மற்றும் தேசிய மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 95 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.