நீண்ட தூர போர் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30MKI போர் விமானம் 8 மணி நேர பயணம் மேற்கொண்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பகுதியில் ரஃபேல் விமானங்களை கொண்டு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சுகோய் போர் விமானம் பயிற்சி மேற்கொண்டுள்ளது. சுகோய் அண்மையில் மேற்கொண்ட மிக நீண்ட கடல் பயிற்சியாக இது பார்க்கப்படுகிறது.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளை உள்ளடக்கிய இந்த பயிற்சியின் போது, சுகோய் விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் சீனா தனது இருப்பை அதிகரித்து வரும் வேளையில், அப்பகுதியில் இந்திய விமானப்படை வான்வெளி பயிற்சிகளை அதிகரித்து வருவது கவனம் பெற்றுள்ளது.