பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை வரும் 15-ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை டெல்லியில் சந்தித்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சுமார் ஆறரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீரர் பஜ்ரங் புனியா, பிரிஜ் பூஷண் மீதான விசாரணையை விரைவுபடுத்தி 15-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்திருப்பதாக கூறினார். இதனால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரிஜ் பூஷண் மீதான விசாரணை முறையாக நடைபெறும் என உறுதியளித்தார். இந்திய மல்யுத்த சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் நடந்து வந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.