டெல்லியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆதீனங்களிடம் பெற்ற தமிழக பாரம்பரிய செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நிறுவினார்.
96 ஆண்டுகள் பழமையான பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், டெல்லியின் மையப்பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலு, பல்வேறு நவீன வசதிகளுடனும் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் கட்டிடம், 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தை திறந்து வைக்கும் முன், மகாத்மா காந்தி சிலைக்கு சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் பிரதமர் மோடி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. பிரதமர், ஓம் பிர்லா உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர். தமிழில் மந்திரங்கள் முழங்க செங்கோலை வைத்து பூஜைகள் நடைபெற்றன.
பூஜையின் நிறைவின் போது நெடுஞ்சாண்கிடையாக வணங்கிய பிரதமருக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள் ஆசி வழங்கினர். பின்னர், கோளறு பதிகம் பாடி பிரதமரிடம் செங்கோலை ஆதீனங்கள் வழங்கினர்.
ஆதீனங்கள் புடை சூழ தமிழர்களின் பாரம்பரிய செங்கோலை ஏந்தி சென்ற பிரதமர், மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே அதனை நிறுவினார். பின்னர் செங்கோலிற்கு பிரதமரும், ஓம் பிர்லாவும் மலர்களை தூவினர். தவில், நாதஸ்வர இசையுடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" முழக்கமும் அரங்கை நிறைத்தது.
பின்னர், நாடாளுமன்ற திறப்பின் அடையாளமாக கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்களை கவுரவித்த பிரதமர், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசினை வழங்கினார்.
பின்னர், புத்தம், இஸ்லாம், சமணம் உள்ளிட்ட 12 மதத் தலைவர்கள் பிரார்த்தனையில் பிரதமர் பங்கேற்றனர்.