உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்று புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியனின் மொழி என்று குறிப்பிட்டார்.
ஜப்பான், பபுவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமானோர் தேசியக் கொடியை அசைத்தும், மலர்களைத் தூவியும் மோடியை வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி நமக்கான மொழி என்றும் ஒவ்வொரு இந்தியனின் மொழி என்றும் குறிப்பிட்டார். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, இந்தியா புத்தர், காந்தியின் தேசம் என்பதால்தான் எதிரி நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
எந்தப் பிரச்சனையிலும் இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்ள உலகமே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பேசும்போது அடிமை மனப்பான்மையில் மூழ்கிவிடக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.