கேரள மாநிலம் கண்ணூரில், 2வது திருமணம் செய்துக் கொண்டு முதல் கணவன் வீட்டிலேயே குடித்தனம் நடத்தி வந்த மனைவி, மூன்று குழந்தைகளை தூக்கிட்டு கொன்று விட்டு, திருமணமான 8 நாட்களில் புதுக் கணவருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள செறுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 12 வயதில் சூரஜ், 10 வயதில் சுஜின் என 2 மகன்களும் எட்டு வயதில் சுரபி என்ற மகளும் இருந்தனர். கணவனை பிரிந்த நிலையில் விவகாரத்து பெறாமலே, கடந்த 16 ஆம் தேதி ஷாஜி, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீஜா.
ஷாஜிக்கு ஏற்கனவே, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரும் விவாகரத்து பெறாமலே ஸ்ரீஜாவை திருமணம் செய்துக் கொண்டதாக தெரிகிறது. திருமணம் முடிந்ததும் ஷாஜியை முதல் கணவன் சுனிலின் வீட்டுக்கு அழைத்து வந்து, அங்குள்ள அறை ஒன்றில் ஸ்ரீஜா குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுனில், வீட்டிலிருந்து இருவரையும் அப்புறப்படுத்த வேண்டுமென போலீஸில் புகார் அளித்தார். இதற்கான விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகுமாறு ஸ்ரீஜாவிடம் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்காததால் பக்கத்து வீட்டினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது, ஷாஜி ஸ்ரீஜா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வந்து பார்த்த போது ஸ்ரீஜாவின் 3 குழந்தைகளும் மேல்மாடிக்கு செல்லும் படிக்கட்டு தூணில் தூக்கிட்டு சடலமாக கிடந்ததை கண்டனர்.
அடுத்தடுத்து செய்த திருமணங்களும் நிம்மதியைத் தராததாலும், குடியிருக்கும் வீட்டையும் காலி செய்து விட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தும் ஸ்ரீஜாவும் ஷாஜியும், 3 குழந்தைகளை கொலை செய்து விட்டு தாங்களும் தற்கொலை செய்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணைக்குப் பின் போலீசார் தெரிவித்தனர்.