கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.
பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார், மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும், அமைச்சர்களாக பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். விழா நடைபெற்ற மைதானத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
இதையடுத்து, சித்தராமையா தலைமையில் நடந்த புதிய அமைச்சரவை கூட்டத்தில், தேர்தலின்போது அளிக்கப்பட்ட முதன்மையாக 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.