கீழே விழுந்து நெற்றியில் வெட்டுக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருந்துக்கு பதில் பெவிகுயிக் போட்டு விட்ட மருத்துவரின் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வெட்டுக்காயம் 'குயிக்'காக குணமாகும் என்று வெட்டுக்காயத்தில் பெவிகுயிக் தடவி விட்ட வில்லங்க மருத்துவர் இவர் தான்..!
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் நெற்றியையொட்டி புருவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
தனது மகனை சிகிச்சைக்காக வம்சி கிருஷ்ணா அங்குள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு மருந்து வைத்து சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பட்டதும் ஒட்டும் பெவிகுயிக்கை ஒட்டி அனுப்பி வைத்தனர்.
தையல் போட்டு சிகிச்சை அளிக்காமல் அந்தப் பகுதி ஒட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த வம்சி கிருஷ்ணா மகனை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பிரணவை பரிசோதித்த டாக்டர்கள் பிரணவின் புருவத்தை பெவிகுயிக் மூலம் ஒட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்த மருத்துவர்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கண் புருவத்தை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பெவிகுயிக் அகற்றப்பட்டது. இதையடுத்து வெட்டுக்காயத்தில் பெவிகுயிக் ஒட்டிய டுபாக்கூர் மருத்துவரிடம் மகனை அழைத்துச்சென்ற விவசாயி வம்சி கிருஷ்ணா, அந்த மருத்துவரை வார்த்தைகளால் விளாசினார்.
இந்த சம்பவம் குறித்து வம்சி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள், அந்த டுபாக்கூர் டாக்டரின் ரெயின்போ கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர்.