16 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய மோட்டார் சைக்கிளில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற பிரபல பைக் யூடியூபர் விபத்தில் சிக்கி தலை சிதறி உயிரிழந்தார்.
நம்ம ஊரு அதிவேக பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசன் போல ஏராளமான பைக் ரசிகர்களால் பிரபலமானவர் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த யூடியூப்பர் அகஸ்தய் சவுகான்.
இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூ செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்ததால் இவரது யூடியூப் சேனல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.
இந்நிலையில், 16 லட்சம் ரூபாய் விலை கொண்ட Kawasaki Ninja ZX10R என்ற பைக்கை வாங்கினார் அகஸ்தய். ஆயிரம் சிசி திறன் கொண்ட அந்த பைக்கில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்பதால் அதன் முழு வேகத்தையும் பரிசோதிக்க முயற்சித்த அகஸ்தய் 277 கிலோ மீட்டர் வேகத்தை எட்டினார்.
இதனை வீடியோவாக பதிவு செய்து தனது சேனலில் பதிவிட்ட நிலையில், தனது பைக்கின் முழு திறனையும் சோதித்து பார்க்க உள்ளதாக தெரிவித்து விட்டு பைக்கை இயக்கினார் அகஸ்தய்.
பைக்கை இயக்கத் துவங்கிய வெறும் 3 செகன்டில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 செகன்டிற்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட பைக்கை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவிலிருந்து டெல்லி நோக்கி செலுத்தினார் அகஸ்தய்.
தனது சாகசத்தை யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்துக் கொண்டே 47வது மைல் பாயின்ட் என்ற இடத்தின் அருகே சென்றுக் கொண்டிருந்த அகஸ்தய் தான் இப்போது 300வது கிலோ மீட்டரை எட்ட உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறினார். சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் முன்சக்கரம் உரசவும், கட்டுப்பாட்டை இழந்து பைக் தூக்கி வீசப்பட்டது. இதில், தலையில் ஹெல்மெட் மற்றும் கை, கால்களில் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்த போதிலும் ஹெல்மெட் சுக்குநூறாக சிதறியதோடு, தலையும் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அகஸ்தய்.
பைக் யூடியூப்பரின் சாகசத்தை படம் பிடித்தவாறே உடன் சென்ற நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு, யூடியூப்பர் அகஸ்தயின் சிதறிய உடல் பாகங்களை தேடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பைக்கர் அகஸ்தயின் இந்த அகால மரணம் அவரை பின்தொடர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது யூடியூப் சேனலிலேயே பலரும் அதிக வேகம் எப்போதும் ஆபத்து தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தன்னை பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்ற உற்சாகத்தில், புதிய பைக் வாங்கி அதில் அதிவேகத்தில் சென்று சாகச வீடியோ வெளியிடும் நம்ம ஊரு அட்டகத்தி பைக் யூடியூப்பர்களுக்கு அகஸ்தயின் மரணம் ஒரு எச்சரிக்கைப் பாடம்