டெல்லியில் மேற்கொண்டு வரும் போராட்டத்தை மேலும் தீவிப்படுத்தப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
தேசிய மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் புகார் கூறி டெல்லி ஜந்தர்மந்தரில் 10-வது நாளாக அப்போராட்டம் நீடிக்கிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர் - வீராங்கனைகளுக்கும் போலீசுக்கும் இடையே நேற்றிரவு மோதல் வெடித்தது.
போலீசார் சிலர் குடிபோதையில் தங்களிடம் முறை தவறி நடந்து கொண்டதே மோதலுக்குக் காரணம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். இதைக் கண்டித்து, சர்வதேச அளவில் தான் வென்ற பதக்கங்களையும் மத்திய அரசு கொடுத்த விருதுகளையும் திருப்பித் தரப்போவதாக முன்னணி வீராங்கனை விநேஷ் போகாட் கூறியுள்ளார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த கல்லூரி மாணவிகளிடமும் போலீசார் தவறாக நடந்து கொண்டதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை முன்அனுமதி இன்றி பார்க்க வந்ததே கைகலப்புக்குக் காரணம் என்று டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.