மதத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கர்நாடகாவின் மாண்டியாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்தியில் உள்ளதைப் போலவே மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சி செய்தால், மாநிலத்தின் வளர்ச்சி வேகமடையும் என்றார்.
மறுபுறம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மைசூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அங்குள்ள பாரம்பரியமிக்க உணவு விடுதியொன்றில் தோசை சுட்ட அவர், சிக்மகளூரில் சிருங்கேரி சாரதா பீடத்தில் வழிபாடு நடத்தி, அங்குள்ள யானைக்கு உணவு வழங்கினார்.சித்ரதுர்காவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தங்களின் எதிர்காலம் மற்றும் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள, காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு கர்நாடக மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இன்னொரு பக்கம், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டார் ஜெயிக்க மாட்டார் என்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். ஹூப்ளி தொகுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு தலையேற்று பேசிய எடியூரப்பா, காங்கிரசுக்கு தாவிய முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்பார் என்பதை ரத்ததில் வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க தயார் என்றார்.
பிரசாரம் அமளி துமளியாகி வரும் அதே வேளையில், பெலஹவி விமான நிலையத்தில், எதேச்சையாக சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும் அரசியல் மோதல்களை மறந்து அளவளாவினர்.