கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநிலம் மோகாவில் காவல்துறையினர் முன்னிலையில் சரண் அடைந்தார்.
மதரீதியான வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில் கடந்த மாதம்18ம் தேதி முதல் தலைமறைவாக இருந்து வந்தார். பல்வேறு ஊர்களில் வெவ்வேறு வேடங்களில் அம்ரித்பால் சுற்றி வந்ததாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில், மோகாவில் உள்ள குருதுவாராவில் அவர் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் சுற்றிவளைத்ததும் அம்ரித்பால் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.