வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தை தடுக்கும் நோக்கில் உலகின் 7 பெரும்பூனை இனங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், பனிச்சிறுத்தைகள், சிவிங்கிப்புலிகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூருவில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சிறப்பு நாணயத்தைதையும் பிரதமர் வெளியிட்டார்.
மேலும், தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையையும் பிரதமர் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 3,167 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு முன்பே சிவிங்கிப்புலிகள் அழிந்ததால், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், உலகின் அதிக எண்ணிக்கையில் 30 ஆயீரம் ஆசிய யானைகள் நம் நாட்டில் தான் உள்ளதாகவும் கூறினார்.