கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டா விரைந்த போலீசார் ஷாருக் சைபி என்ற நபரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் சென்ற விரைவு ரயில், எலத்தூர் பகுதியில் சென்றபோது ஒருவர், பயணிகளின் மீது திடீரென எரிபொருளை ஊற்றி தீ வைத்ததில், அச்சத்தில் 3 பேர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து பலியாகினர்.
9 பேர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட பையிலிருந்து செல்போன், டைரி ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், அதன் மூலம் கிடைத்த தகவலின் படி குற்றவாளியை பிடிக்க நொய்டா மற்றும் ஹரியானா சென்ற போலீசார், உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் ஷாருக் சைபி என்பவரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கண்ணூரில், சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளை, ரயில்வே பாதுகாப்புப்படை ஐஜி ஈஸ்வர ராவ் ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், ரயில் நிலையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்