தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில், வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தின்போது, புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி, 4 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
செகந்தராபாத்தில் ஸ்வப்னலோக் வணிக வளாகத்தில் நேற்றிரவு திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் இருளில் சிக்கிக்கொண்டனர்.
உதவி கேட்டு மக்கள், செல்போன் டார்ச் விளக்கை எரியவிட்டதையடுத்து, தீயணைப்புப்படையினர் அவர்களை பத்திரமாக வெளியேற்றினர்.
எனினும் 5ஆவது தளத்திலுள்ள அறை ஒன்றில் மயங்கிக்கிடந்த 6 பேர் மீட்கப்பட்டு, அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடும் போராட்டத்திற்குப்பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. மின்கசிவால் விபத்து நேரிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.