பிளிப்கார்ட்டில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்கு ஐ போனை கொண்டு வந்த டெரிவரி ஊழியரை கொலை செய்து , சடலத்தை எரித்த நிலையில் சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கினார்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் லட்சமிபூரை சேர்ந்தவர் 27வயதான ஹேமந்த் நாயக். பிளிப்கர்ட்டில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்த ஹேமந்த் நாயக் கடந்த 7 ந்தேதி டெலிவரி கொடுப்பதற்காக சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை.
இதையடுத்து ஹேமந் நாயக்கை காணவில்லை என்று அவரது சகோதரர் மஞ்சா நாயக் அரசிகேரே நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் கடைசியாக யாருக்கு டெலிவரி செய்வதற்காக பொருட்களை கொண்டு சென்றார் என்று விசாரணையை முன்னெடுத்த போலீசார், அஞ்ச கொப்பளவ் பகுதியை சேர்ந்த ஹேமந்த் தத்தா என்பவரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தனது வீட்டில் ஐ போனுக்குரிய பணத்தை வாங்கிக் கொண்டு அதனை டெலிவரி செய்து விட்டுச்சென்றுவிட்டார் என்று கூறியதால், போலீசார் செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.
இதற்க்கிடையே அந்தப்பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே 11 ந்தேதி இரவு எரிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சடலம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நள்ளிரவில் அந்த சடலத்தை இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது
வாகன பதிவெண்ணை வைத்து அந்த சடலத்தை அங்கு கொண்டு வந்து போட்டுச்சென்றது ஹேமந்த் தத்தா என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது கொலைக்காண பின்னணி அம்பலமானது.
ஐ போன் மீது தீராத காதல் கொண்ட தத்தா, உபயோகப்படுத்தப்பட்ட ஐ போனை 46 ஆயிரம் ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். கடந்த 7 ந்தேதி இவரது வீட்டுக்கு ஐ போன் பார்சலுடன் சென்றுள்ளார் ஹேமந்த் நாயக், போனை தாருங்கள் பணம் தருகிறேன் என்று தத்தா கூறிய நிலையில் பணம் தந்து விட்டு ஐ போனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி மறுத்துள்ளார். பணம் எடுத்து வருவதாக அவர் வீட்டிற்குள் சென்ற நிலையில் ஹேமந்த நாயக் வீட்டு சோபாவில் அமர்ந்து செல்போனில் முக நூல் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை பின் பக்கம் இருந்து கவனித்த தத்தா, அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, தனக்கு வந்த ஐ போன் பார்சலை எடுத்து பயன்படுத்த தொடங்கினார். தத்தாவின் சடலத்தை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்துள்ளார்.
வீட்டில் துர்நாற்றம் அதிகமாக வீசத்தொடங்கியதால் 11 ஆம் தேதி இரவு சாக்கு முட்டையில் நாயக் உடலை கட்டி , இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தபால் நிலையம் அருகில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். முழுவதுமாக உடல் எரிவதற்குள்ளாக அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஐ போன் மீதான அளவு கடந்த விருப்பத்தால் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்து கேஷ் ஆன் டெலிவரிக்குய் செல்லும் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்குள் செல்லாமல் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று காவல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.