பிபிசி நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும், இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 3 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆய்வின்போது அந்நிறுவனம் வரி செலுத்தாமல் இருந்ததற்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கான வரி முறையாக செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும், நிறுவனத்தில் டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வருமான வரித்துறை, அது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.