ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையாக கருதப்படும் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு இந்த ஆலை கட்டுமான பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து 7 ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்தநிலையில் இன்று பிரதமர் மோடி அந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இந்த ஆலையில் ஆரம்ப கட்டத்தில் இலகுரக ஹெலிகாப்டர்களும், பின்னர் படிப்படியாக இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்படவுள்ளன.
அடுத்த 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் வரை எடை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.