அனைத்து வங்கிகளும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களிடம் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை என்பதை, வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாக்கர் அறைகளை கண்காணிக்க, வங்கிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயம் என்றும், அதன் தரவுகளை 180 நாட்களுக்கு சேமிக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கான வழிகாட்டுதல்களை
ஆர்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
லாக்கர்களில் வைக்கப்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டாலோ அல்லது தீ விபத்தில் சேதமானாலோ வங்கிக்கட்டணத்தை விட, 100 மடங்கு வரையிலான தொகையை, டெபாசிட் செய்பவர்கள் பெறலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கரையோ அல்லது அதில் உள்ள பொருட்களையோ முடக்கவோ, கைப்பற்றவோ அரசு அதிகாரிகள் வங்கியை அணுகினால், வாடிக்கையாளருக்கு வங்கி தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியின் திருத்தப்பட்ட லாக்கர் விதிகள், ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.