மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என, கர்நாடக முதல்வரும், அம்மாநில டிஜிபியும் கூறியுள்ளனர். கோவை சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், குண்டுவெடிப்பில் காயமடைந்த நபருக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்த புகாரில், ஊட்டியைச் சேர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற இடத்தில், நேற்று மாலை சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் திடீரென வெடித்தது.
இதில் ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் ஆட்டோவில் சோதனை செய்ததில், எரிந்த நிலையில் ஒரு குக்கர் பேட்டரிகளுடன் கண்டெடுக்கப்பட்டது. அதோடு, பிரேம் ராஜ் என்ற பெயரிலான ஆதார் அட்டையும் போலீசாருக்கு கிடைத்தது. இது தீவிரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து, மங்களூருவில் சிறப்பு தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பும், விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு தற்செயலானது அல்ல, திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆட்டோவில் குக்கரில் பயன்படுத்தியது எல்.இ.டி வகை வெடிகுண்டு என தெரிவித்தார்.
ஆட்டோவில் கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டை ரயில்வே ஊழியரான பிரேம் ராஜ் என்பவருடையது என்றும், சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் சென்ற போது அவர், தவறவிட்ட ஆதார் அட்டையை தீவிரவாதி பயன்படுத்தியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இதனிடையே, மங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஆட்டோவில் பயணித்த அந்த நபர் கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசாரும் கர்நாடக போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், ஆட்டோவில் பயணித்த நபருக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக ஊட்டியைச் சேர்ந்த ஆசிரியரான சுரேந்திரன் என்பவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த அந்த நபர், கோவையில் சில காலம் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், கோவை சம்பவத்திற்கும் மங்களூர் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
எனவே, கோவை சம்பவம் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு காவல்துறையிடம் கேட்டுப் பெற கர்நாடக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு, 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணியிடம் வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.