முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது சட்டத்திருத்தம் செல்லும் என, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலுள்ள 5 நீதிபதிகளில், 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், தலைமை நீதிபதி உட்பட இருவர், இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ. லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், நேரலையில் இன்று, நீதிபதிகள் தீர்ப்பினை வாசித்தனர். முதலில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகிய மூவரும், 10% இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என தெரிவித்தனர்.
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பையோ, 50% இட ஒதுக்கீட்டையோ, இந்த 10% இட ஒதுக்கீடு பாதிக்காது என குறிப்பிட்டார். சமூக - கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
நீதிபதி பெலா திரிவேதி தனது தீர்ப்பில், 10% இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது என கூற முடியாது எனவும், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை, தனியாக வகைப்படுத்துவது சரியானதே என்றார். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி ஆகியோரது தீர்ப்புடன் ஒத்துப்போவதாக, நீதிபதி பர்திவாலாவும் குறிப்பிட்டார்.
ஆனால், நீதிபதி ரவீந்திரபட் 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதம் என்றும், 50% இட ஒதுக்கீட்டில் விதிமீறலை அனுமதிப்பது, பிரிவினைக்கு வித்திடும் என்றும் தீர்ப்பளித்தார்.
இறுதியாக தனது தீர்ப்பை வெளியிட்ட தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்புடன், தமது பார்வை ஒத்துப்போவதாக குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, 3க்கு 2 என்ற அடிப்படையில், 10% இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில், அவர் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கடைசி தீர்ப்பு இதுவாகும்.