குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டுகள் பழமையான தொங்குபாலம் அறுந்து விழுந்து 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் செல்கிறார்.
மச்சு நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம் கொண்ட 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் 26-ம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை அப்பாலத்தின் மீது, சுமார் 500 பேர் திரண்டதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராதவிதமாக கேபிள் அறுந்து, பாலம் ஆற்றில் விழுந்தது.
ராஜ்காட் தொகுதி பா.ஜ.க எம்.பி. மோகனின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உள்பட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 140-க்கும் மேற்பட்டவர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
பாலத்தை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்ட ஒரேவா என்ற கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, பாலம் அறுந்து விழுந்து இடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். முன்னதாக நேற்று காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இதுதொடர்பாக பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர், உள்துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதனிடையே பாலம் அறுந்து விழுந்து உயிரிந்தவர்களுக்காக நாளை குஜராத் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார். நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.