ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் இந்தியா- பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இடையேயான 7வது ஒத்திகையில் இருநாடுகளின் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கருடா 7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒத்திகை, கடந்த 26ம் தேதி தொடங்கியது. வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி வரை நடைபெறும் ஒத்திகையில், பிரான்ஸ் தரப்பில், 4 ரபேல் போர் விமானங்கள், ஏ 330 பன்முக டேங்கர் போக்குவரத்து விமானம் ஒன்று மற்றும் 220 விமானப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா தரப்பில் சுகோய் 30 போர் விமானங்கள், ரபேல் போர் விமானங்கள், இலகு ரக போர் விமானமான தேஜாஸ், இலகு ரக ஹெலிகாப்டர், எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள், நடுவானில் விமானத்தில் எரிபொருளை நிரப்ப பயன்படுத்தப்படும் விமானம், எதிரி நாடுகளின் விமானம் குறித்து எச்சரிக்கும் அவாக்ஸ் அமைப்பு உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன .