இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
சர்வதேச அளவில் காவல்துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் இண்டர்போல் அமைப்பு உருவாக்கப்பட்டது . பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் பொதுச்சபைக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன் 1997ம் ஆண்டு இந்தக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இருபத்தி ஐந்து ஆண்டுக்குப் பின் மீண்டும் நடைபெறுகிறது.
டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். 195 நாடுகளில் இருந்து அமைச்சர்கள், காவல் அமைப்பின் தலைவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் உள்துறை அமைச்சர், சி.பி.ஐ. இயக்குநர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். டெல்லி பிரகதி மைதான், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் இதனை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. செய்திருக்கிறது.