இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில், நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் உள்ள இலக்கை தாக்க வல்ல ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் பாலிஸ்டிக் ரக ஏவுகணை இன்று பரிசோதிக்கப்பட்டது. வங்கக் கடலில் நடைபெற்ற சோதனையில், அந்த ஏவுகணை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்பிற்குள், இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சோதனையில் நீர்மூழ்கி ஏவுகணை அமைப்பின் அனைத்து செயல்பாட்டு திறன்களும், தொழில்நுட்ப அளவீடுகளும் சரிபார்க்கப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் முதல் அணுசக்தி ஆற்றலின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டதாகும்.
சுமார் 6,000 டன் எடையுள்ள அந்த கப்பல், நீர் மூழ்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சுமந்து செல்லும் திறன்கொண்டது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம், நீர், ஆகாயம் ஆகிய மூன்றில் உள்ள இலக்கையும் ஐ.என்.எஸ். அரிஹந்த் கப்பலின் மூலம் துல்லியமாக தாக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.