அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதே தமது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.
இதில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கடை கோடியில் வாழும் அடித்தட்டு மக்களுக்கும் விரைந்து அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அதை இலக்காக வைத்தே தமது அரசு பணியாற்றி வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் சுமார் 45 கோடி பேர் வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கையானது அமெரிக்க மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் என்றும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த 45 கோடி பேருக்கும் தமது அரசின் நடவடிக்கையால் வங்கி கணக்குத் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல், பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையான 13 கோடி பேருக்கு காப்பீடு அளித்திருப்பதாகவும் கூறினார்.
11 கோடி குடும்பங்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரப்பட்டிருப்பதாகவும், 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சி பயணத்தில் தொழில்நுட்பமும், திறமையும் 2 தூண்களாக திகழ்வதாகவும், இந்திய தொழில்நுட்பமானது, யாரையும் புறக்கணிப்பது கிடையாது, அனைவரையும் உள்ளடக்கியது என்றும் பிரதமர் தெரிவித்தார்.