இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமமாக குஜராத்தின் மோதேராவை அறிவித்த பிரதமர் மோடி, மக்களுக்கு அரசு மின்சாரம் வழங்கி வந்த நிலை மாறி, தற்போது மக்களே அதனை உற்பத்தி செய்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மெசானா மாவட்டத்தில் உள்ள மொதேரா என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர், மொதேரா கிராமத்தை இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமமாக பிரதமர் அறிவித்தார். இந்த கிராமத்தில் சுமார் 1,300 சூரிய மின்னாற்றல் அமைப்புகள் அனைத்து வீடுகள், அலுவலகங்களின் கூரைகளில் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து 80 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றியுள்ளது.
பகல் நேரத்தில் சோலார் பேனல்கள் மூலமும், மாலைக்கு மேல் பின் பி.இ.எஸ்.எஸ். எனப்படும், சூரிய ஆற்றலை சேமித்து வைத்த பேட்டரி மூலமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்களின் மின்சாரக் கட்டணம் 60 முதல் 100 சதவீதம் வரை சேமிக்கப்படும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மோதேரா கிராமத்தில் புகழ்பெற்ற சூரிய கடவுள் கோயில் உள்ள நிலையில், அங்கு மெகா சூரிய மின்னாற்றல் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் பேசிய பிரதமர், இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும், சூரிய மின்னாற்றல் திட்டம் மூலம் மொதேரா வரலாறு படைத்துள்ளதாகவும் கூறினார். குடிமக்களுக்கு அரசு மின்சாரம் வழங்கி வந்த நிலை மாறி தற்போது, சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம், குடிமக்கள் தாங்களாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்வார்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மோதேராவில் உள்ள மோதேஷ்வரி மாதா கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர், புகழ்பெற்ற சூர்ய கோவிலில் முப்பரிமாண ஒளி - ஒலி நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. நடன நிகழ்ச்சியுடன், லேசர் ஒளியில் காட்சிப்படுத்தப்பட்ட கோவிலின் பெருமைகளை பிரதமர் மோடி கைதட்டியபடி உற்சாகமாக கண்டு ரசித்தார்.