420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், அனில் அம்பானிக்கு எதிராக நவம்பர் 17 வரை கடும் நடவடிக்கை எடுக்க கூடாதென்று வருமான வரித்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் 814 கோடி டெபாசிட் செய்ததை கண்டுபிடித்த வருமான வரித்துறை, அந்த டெபாசிட்டுக்கு 420 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தவில்லை , இதற்காக 2015ம் ஆண்டு கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையெதிர்த்து அனில் தாக்கல் செய்த மனுவில், கருப்பு பண தடுப்பு சட்டம் 2015ல்தான் கொண்டு வரப்பட்டது, ஆனால் டெபாசிட் 2006-7 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது என்பதால் அச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
விசாரணையில், வருமான வரித்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால், வழக்கை நவம்பர் 17க்கு ஒத்திவைத்து, அதுவரை கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாதென உத்தரவிட்டது.