ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்க முயன்ற இளைஞர் கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெட்டான்சேரு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.
கடந்த வியாழக்கிழமை இரவு ஹூப்ளி -விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகாவில் இருந்து நந்தியாலா வந்தார். ரயிலில் அவர் தூங்கி விட்ட நிலையில் அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டி வெள்ளிக்கிழமை காலை ரயில் கிட்டலூர் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து புறப்பட்டு செல்வதை, தூங்கி எழுந்த ரவிக்குமார் தெரிந்து கொண்டார்.
கிட்டலூர் ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயில் அப்போது மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்ததால் , தூக்க கலக்கத்துடன் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது கால் தவறி விழுந்த அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார். இதனை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயிலை நிறுத்த செய்தார். ஆனால் அவரால் வெளியே வர இயலவில்லை.
இதையடுத்து ரயில்வே போலீசார்,ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோர் பிளாட்பாரத்தை உடைத்து ரவிக்குமாரை மீட்டனர்
இடுப்பில் காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நந்தியாலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்