லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்த மர்ம ஆசாமி ஒருவன், விஷ ஊசி போட்டு வாகன ஓட்டியை கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பொப்பாரி கிராமத்தை சேர்ந்தவர் ஜமால் சாகிப். திங்கட்கிழமை மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது முன் பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் லிப்ட் கேட்டு கையை காண்பித்துள்ளார். ஜாமால் சாகிப்பும் அந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பயணித்துள்ளார்
பைக்கில் ஏறி அமர்ந்த மர்ம ஆசாமி, தான் மறைத்து வைத்திருந்த ஊசியை எடுத்து ஜமால் சாகிப் உடலில் செலுத்தியதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து சுமார் 400 அடிகள் மட்டுமே சென்ற நிலையில் ஜமால் சாகிப் வாகனத்தை ஓட்ட இயலாமல் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த ஆசாமி ஜமால் சாகிப்பை கீழே தள்ளிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு மாயமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.
சாலையில் ஜமால் சாகிப் மயங்கி கிடப்பதை பார்த்த உள்ளூர் வாசிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அரை மயக்கத்தில் இருந்த ஜமால் சாகிப் நடந்த சம்பவங்களை எல்லாம் அங்கிருந்தவர்களிடம் ஒவ்வொன்றாக தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்ட நிலையில் இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
ஜமால் சாகிப் மயங்கி கிடந்த இடத்தில் இருந்து சிரிஞ் உடன் கூடிய ஊசியை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விஷ ஊசி போட்டு பைக்கை பறித்துச் சென்ற கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அங்குள்ள கம்மம் அரசு மருத்துவமனையில் ஜமால் சாகிப் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருக்கும் பிணக்கூராய்வில் ஜமால் சாகிப் உடலில் ஊசி மூலம் செலுத்தப்பட்ட விஷம் என்னமாதிரியான வகையை சார்ந்தது தெரியவரும் என்றும்
இனி சாலையில் காத்திருப்போருக்கு இரக்கப்பட்டு லிப்ட் கொடுப்போர் கூட இனி வாகனத்தில் அறிமுகமில்லா நபரை ஏற்ற யோசிக்கும் சூழ் நிலையை இந்த விஷ ஊசி கொலை சம்பவம் உருவாக்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.