இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்ட பிரதமர் மோடி, லாஜிஸ்டிக்ஸ் செலவை ஒற்றை எண்ணுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சரக்குப் போக்குவரத்துக்கான செலவைக் குறைக்கவும், அதன் மூலம் ஏற்றுமதி சந்தைகளில் போட்டியை சமாளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை தயாரிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதனை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, புதிய கொள்கை மூலம் சரக்குப் போக்குவரத்துக்கான செலவு 14 சதவீதத்தில் இருந்து விரைவில் ஒற்றை இலக்கத்திற்குக் குறையும் என்றார். வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க உள்ள இந்தியா, உலக நாடுகளுடன் போட்டியிடும் நாடாகவும் மாற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் சரக்குப் போக்குவரத்து சிறுத்தையைப் போல் வேகம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, இந்தியா உற்பத்தி செய்யும் பொருட்களை விநியோகிக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவினங்களைக் குறைக்கவும் வேளாண் பொருட்கள் வீணாவதைத் தடுக்கவும் காலத்தையும் பணத்தையும் சேமிக்கவும் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை அவசியம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ள இந்தியா, உற்பத்தித்துறையில் தன்னிறைவு பெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புதிய கொள்கை அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.