நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேசத்தில் தேசிய உயிரியல் பூங்காவில் விடுவித்தது, தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.
இந்தியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாகக் கருதப்படும் சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்ட மத்திய அரசு, இதற்காக நமீபியா அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
அதன்படி நமிபியாவால் வழங்கப்பட்ட 3 ஆண் மற்றும் 5 பெண் சிவிங்கிப்புலிகள் போயிங்-747 சிறப்பு சரக்கு விமானம் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து, சினுக் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களில் குனோ தேசிய உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதைத் தொடர்ந்து, குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 8 சிவிங்கி புலிகளை விடுவித்தார். மேலும், அந்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் பேசிய அவர், பொருளாதாரமும், இயற்கை சூழலும் மோதலுக்கான களங்கள் அல்ல என்ற செய்தியை சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது மூலம் உலகுக்கு இந்தியா தெரியபடுத்தியிருப்பதாகவும், இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அம்மாநிலத்தின் சியோப்பூரில் நடைபெற்ற சுய உதவி குழுக்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், புதிய இந்தியாவில் பஞ்சாயத்து அலுவலகம் முதல் குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை பெண் சக்தியின் வலிமை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். ஒரே நாளில் தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை வெளியிட்டதும், சிவிங்கிப் புலிகளை விடுவித்ததற்கும் தொடர்பு உள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தளவாடங்கள் அவ்விலங்கின் வேகத்தில் செல்ல வேண்டும் என விரும்புவதாக கூறினார்.