2020ம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு பிறகு, சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி நாளை முதன்முறையாக சந்தித்து பேசவுள்ளார்.
சீனா, இந்தியா, ரஸ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் மாநாடு, சாமர்கண்டில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து தனி விமானத்தில் உஸ்பெகிஸ்தான் புறப்பட்டு செல்கிறார்.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புதின், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதேநேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் உடனான பிரதமர் மோடியின் இருதரப்பு சந்திப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீன அரசுகள், தலைவர்கள் இடையேயான சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தன.
இந்நிலையில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், சீன அதிபரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்து பேச இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு சம்பவத்தையடுத்து லடாக் எல்லையில் இந்தியாவும், சீனாவும் படைகளை குவித்துள்ளன.
இதனால் நிலவும் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து அண்மையில் 2 நாடுகளும் வீரர்களை பின்வாங்க செய்தன. இந்த சூழ்நிலையில் சீன அதிபர், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடைபெற்றால், அது இருநாடுகளின் உறவில் முக்கியமானதாக அமையும் என கூறப்படுகிறது.