ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு நாளை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேச இருக்கிறார்.
ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் நடைபெறுகிறது. இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து நாளை தனி விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார்.
மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்ஸியோகேவ் (Shavkat Mirziyoyev) உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லடாக் எல்லையில் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இருந்து இந்தியா- சீனா துருப்புகள் அண்மையில் பின்வாங்கின. இதனால் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேச அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருநாடுகளும் இதுவரை அதுகுறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக தற்போது உஸ்பெகிஸ்தான் நாடு உள்ளது. அடுத்த ஆண்டு அந்த அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா ஏற்கவுள்ளது.