கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்த ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, படைவிலக்கல் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள பட்ரோலிங் பாயிண்ட்-15ல் இருந்து இந்தியா மற்றும் சீனப் படைகள் வீரர்களை வாபஸ் பெற்று வருகின்றன. இந்தச் சூழலில், இரண்டுநாள் பயணமாக தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே நேற்று லடாக் சென்றார்.
சீனாவுடனான எல்லையையொட்டிய கிழக்கு லடாக்கில் புதிதாக இணைக்கப்பட்ட ராணுவ தளவாடங்களைக் கொண்டு பர்வத் பிரஹார் என்ற பயிற்சி நடைபெற்று வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் நடைபெறும் இப்பயிற்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போபர்ஸ், ஹோவிட்சர் பீரங்கிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சியை மனோஜ் பாண்டே நேரில் பார்வையிட்டார்.
கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்படும் படை விலக்கல் உள்பட ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம், படைகளின் தயார்நிலை குறித்து உயரதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இன்று அவர் சியாச்சினுக்கு சென்று அங்குள்ள படை நிலவரத்தை நேரில் பார்வையிட உள்ளார்.
கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இருதரப்பு படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு ரீதியான பலகட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக எல்லையில் அமைதியை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.