டெல்லியில் புதுப்பிக்கப்பட்டு கடமைப் பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜபாதையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும்.
தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர், குடியரசு துணைத் தலைவர் அலுவலகங்கள் உள்ளிட்டவை கட்டுமானப் பணி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ராஜபாதையையும் புதுப்பித்து, கர்த்தவ்ய பாத் எனப்படும் கடமை பாதையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடமை பாதையையும், இந்தியா கேட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முழு உருவச்சிலையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். 25 அடி உயரம் கொண்ட இச்சிலை, 65 மெட்ரிக் டன் எடையுள்ள ஒற்றை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டதாகும்.
கடமை பாதையில் 3 லட்சத்து 90 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு முற்றிலும் பசுமையான புல்வெளியாக மாற்றப்பட்டுள்ளது.
சிவப்பு கிரானைட் நடைபாதைகள், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 74 பழங்கால விளக்கு கம்பங்களும், 900 மின் கம்பங்களும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நடந்து சென்றபடி உணவருந்த, பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவு வகைகளுடன் 40 விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் இன்று தொடங்கி வைத்ததும் நாளை முதல் சென்ட்ரல் விஸ்டா பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
புதிதாக நிறுவப்பட்ட வசதிகளில் தூய்மையை பராமரிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.