பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று காலை வழங்கி கவுரவித்தார். நல்லாசிரியர் விருதுகளை பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மாலையில் கலந்துரையாடினார்.
ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், புதிய கல்விக் கொள்கை 1986 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளதாகவும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
'பி.எம்.- ஸ்ரீ' எனப்படும் பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அப்பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் படி மாதிரிப் பள்ளிகளாக செயல்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், 'பி.எம்.- ஸ்ரீ' திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள், நவீன மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்டிருக்கும் என்றும், அப்பள்ளிகளில் புதிய தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பல நவீன உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய கல்விக் கொள்கை சமீப ஆண்டுகளில் கல்வித் துறையை மாற்றியுள்ளதாகவும், 'பி.எம். - ஸ்ரீ' பள்ளிகள் , நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும், சுமார் 250 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்களை நாம் பின்னுக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார்.