நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா - வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க தேசத்தில் குடிபெயர்ந்த ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை 11 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால் அவர்களை மியான்மருக்கு அனுப்புவது குறித்து இந்தியாவின் உதவியை நாட இருப்பதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான டீஸ்டா நதிநீரைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.