இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாகவும், சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமாதாபதில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதமாக முன்னேற்றம் கண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியப் பொருளாதாரத்தை உலகம் மிகவும் மரியாதையுடன் நோக்குவதாக கூறிய ஜெய்சங்கர், கோவிட் ஊரடங்கு காலம் தொடங்கியதில் இருந்து சுமார் 80 கோடி பேருக்கு இந்தியா உணவளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கோவிட், உக்ரைன் போர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிய மூன்று பெரிய அதிர்ச்சிகளை ஆசியாவின் பொருளாதாரம் சந்தித்து வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கிழக்கு லடாக் எல்லையில் படைகளைக் குவித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் சீனாவைப் பற்றி பேசிய அவர், எல்லையைப் பொருத்த நிலவரம் தான் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான உறவைத் தீர்மானிக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரிந்ததுதான் என்று குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்பினாலும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது மக்கள் நலன்களுக்கு அவசியமான, சுதந்திரமான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.