கேரளாவில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் நதி நீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கேரளாவின் கோவளத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்களும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென் மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்றச் சம்பவங்களை தடுப்பது, தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அமித்ஷா முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடலோரப் பகுதிகளை கண்காணிப்பது போன்ற மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.